Saturday, May 23, 2015

5வது முறையாக அரியணை ஏறினார் ஜெயலலிதா. கும்பல் கும்பலாக அமைச்சர்கள் பதவி ஏற்பு

Unknown  /  at  11:30 PM  /  No comments

தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா நேற்று மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.



சென்னை ராயப்பேட்டை தலைமைக்கழகத்தில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் ஒருமனதாக ஆளும் கட்சித் தலைவராக தேர்வானார்.

இதையடுத்து கவர்னர் ரோசய்யாவை நேற்று பிற்பகல் ஜெயலலிதா சந்தித்தார். அப்போது அவர் 28 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை கவர்னரிடம் வழங்கினார்.

பிறகு அவர் அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 217 நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை நேரில் கண்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அவர் சென்ற வழி நெடுகிலும் சாலையோரங்களில் இருபுறமும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜெயலலிதாவை வரவேற்று மகிழ்ந்தனர்.

ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று (சனிக்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மிகவும் கோலாகலமாக நடந்தது. இதற்காக பல்கலைக்கழக வளாகப் பகுதியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜெயலலிதா பதவி ஏற்பதை காண திரண்டு வந்த அ.தி.மு.க.வினர், பொது மக்கள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்களை அவர்களுக்குரிய இடங்களில் அமர செய்யும் பணிகளில் காலை முதலே போலீசார் ஈடுபட்டனர். மக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வந்து செல்லவும், வாகனங்களை உரிய இடங்களில் நிறுத்துவதற்கு உதவவும் சுமார் 7 ஆயிரம் போலீசார் அந்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு வருபவர்கள் காலை 10 மணிக்கெல்லாம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும் என்று நேற்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் காலை 9 மணிக்கெல்லாம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கு பகுதியில் அ.தி.மு.க.வினர் குவியத் தொடங்கினார்கள்.


10 மணிக்கெல்லாம் அந்த பகுதியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் என திரண்டிருந்தனர். 10 மணிக்குள் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், புதிய மந்திரிகள் 28 பேர், அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் 144 எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் விழாவில் பங்கேற்றனர்.

ஜெயலலிதா 10.56 மணிக்கு விழா அரங்குக்கு வந்தார். அவரை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரைத் தொடர்ந்து அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் ஜெயலலிதாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதை ஏற்றுக் கொண்டு ஜெயலலிதா விழா மேடைக்கு வந்தார். அப்போது அ.தி.மு.க.வினர், ‘‘புரட்சித் தலைவி வாழ்க’’ என்று கோஷமிட்டனர். ஜெயலலிதா இருக்கையில் அமர்ந்ததும் அமைச்சர்கள் அனைவரும் தமது இருக்கைகளில் அமர்ந்தனர்.


சரியாக 11 மணிக்கு கவர்னர் ரோசய்யா விழா அரங்குக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் ஞானதேசிகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து விழா மேடைக்கு வந்த கவர்னர் ரோசய்யாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பிறகு அவர் 28 அமைச்சர்களையும் கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

தலைமை செயலாளர் ஞானதேசிகன், பதவி ஏற்பு வைபவத்தை நடத்தும்படி கவர்னரை அழைத்தார்.

முதலில் ஜெயலலிதா முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

இதன் மூலம் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்–அமைச்சராக 5–வது முறையாக பதவியேற்று சாதனை படைத்துள்ளார். இதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டதும் அரங்கில் திரண்டிருந்தவர்கள் கைத்தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

ஜெயலலிதாவைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அவர்கள் விவரம் வருமாறு:–

1. ஓ.பன்னீர்செல்வம் (நிதி)

2. நத்தம் விசுவநாதன் (மின்சாரம்)

3. ஆர்.வைத்திலிங்கம் (வீட்டு வசதி)

4. எடப்பாடி பழனிச்சாமி (நெடுஞ்சாலை)

5. பி.மோகன் (ஊரக தொழில்)

6. பா.வளர்மதி (சமூக நலம்)

7. பி.பழனியப்பன் (கல்வி)

8. செல்லூர் ராஜு (கூட்டுறவு)

9. ஆர்.காமராஜ் (உணவு)

10. பி.தங்கமணி (தொழில்)

11. வி.செந்தில்பாலாஜி (போக்குவரத்து)

12. எம்.சி.சம்பத் (வணிக வரி)

13. எஸ்.பி.வேலுமணி (உள்ளாட்சி)

14. சின்னையா (கால்நடை)

15. எஸ்.கோகுலஇந்திரா (கைத்தறி)

16. எஸ்.சுந்தர்ராஜ் (விளையாட்டு)

17. எஸ்.பி.சண்முகநாதன் (சுற்றுலா)

18. என்.சுப்பிரமணியன் (ஆதிதிராவிடர் நலத்துறை)

19. கே.ஏ.ஜெயபால் (மீன் வளம்)

20. முக்கூர் சுப்பிரமணியன் (தகவல் தொழில்நுட்பம்)

21. ஆர்.பி.உதயகுமார் (வருவாய்)

22.கே.டி.ராஜேந்திர பாலாஜி (செய்தி)

23. பி.வி.ரமணா (பால் வளம்)

24. கே.சி.வீரமணி (பள்ளி கல்வி)

25. தோப்பு வெங்கடாசலம் (சுற்றுச்சூழல்)

26. டி.பி.பூனாட்சி (காதி கிராம தொழில்)

27. எஸ்.அப்துல்ரஹீம் (பிற்பட்டோர் நலன்)

28. சி.விஜயபாஸ்கர் (சுகாதாரம்)

இவர்கள் 28 பேருக்கும் இரண்டு தடவை குழு, குழுவாக கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

20 நிமிடங்களில் பதவி ஏற்பு விழா முடிந்தது. தேசியக் கீதம் இசைக்கப்பட்ட பிறகு கவர்னர் ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். பிறகு ஜெயலலிதா போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Share
Posted in: , Posted on: Saturday, May 23, 2015

0 comments:

Copyright © 2013 Thiruvalandurai Village / Perambalur District .
.