Tuesday, February 17, 2015

திருமணச்சட்டங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு

Unknown  /  at  10:35 AM  /  No comments

2009-ம் ஆண்டுக்கு முன்பு எந்தத் திருமணத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசிமில்லை. அப்போது மொத்தம் மூன்று வகையான திருமண பதிவுச் சட்டங்கள் தமிழ்நாட்டில் இருந்தது. அவை,
1) இந்து திருமணச்சட்டம்
2) தனி திருமணச் சட்டம்
3) கிரிஸ்தவ திருமணச் சட்டம்.
இந்த மூன்று வகையான சட்டங்களில் ஒன்றில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறையே 2009-ம் ஆண்டுக்கு முன்பு வரை இருந்து வந்தது.
2009-ம் ஆண்டுக்கு பிறகு, இந்த மூன்று வகை திருமண சட்டங்களில் ஏதேனும் ஒன்றில் திருமணத்தை பதிவு செய்தாலும்,
மீண்டும் தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் – 2009-ன்படி கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். ஆதலால் மேற் சொன்ன மூன்று வகையான திருமண பதிவுச்சட்டங்களில் பதிவு செய்வது அவசியம் இல்லாமல் போனது. எனவே தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் – 2009-ன் படி மட்டுமே திருமணங்களை பதிவு செய்தால் போதும் என்ற நிலை வந்தது.
இத்திருமணங்களை எப்படி பதிவு செய்வது?
****************************************************************
தமிழ் நாடு திருமணச் சட்டம் – 2009ன் படி திருமணம் நடந்த 90 தினங்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பதிவுச செய்யவேண்டும்.
திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் ரூ.100/- மட்டுமே.
திருமணம் முடிந்து 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத கட்டணம் ரூ.50/-ம் சேர்த்து மொத்தம் ரூ.150/- செலுத்தவேண்டும்.
திருமணம் முடிந்து 150 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு திருமணச் சட்டம்-2009-ன்படி பதிவு செய்ய முடியாது.
150 நாட்களுக்கு பிறகும் பதிவு செய்யாதவர்கள் மீது அந்த பகுதி பதிவாளர் குற்ற நடவடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்ட விதி முறை வகுக்கப்பட்டுள்ளது.
எனவே இனி திருமணம் செய்து கொள்ளும் அனைவரும் 90 நாட்களுக்குள் இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.
திருமணம் எங்கு நடந்ததோ அந்த பகுதிக்கான பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்ய முடியும். (மூன்று வகையான திருமணச் சட்டத்தில் திருமணம் நடந்த பகுதி பதிவாளர் அலுவலகம் அல்லது பெண் வீடு அல்லது மாப்பிள்ளை வீடு உள்ள பகுதி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும் வகையில் விதி முறை உள்ளது).
திருமணத்தன்று ஆணுக்கு வயது 21-ம்,
பெண்ணுக்கு வயது 18-ம் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.
திருமண பத்திரிக்கை.
கோவில்/சர்ச்/பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாக கொடுக்கும் ஆவணம்.
திருமணம் நடந்ததிற்கான வேறு ஆதாரங்கள் (நோட்டரி அபிடிவிட், போன்ற ஆவணங்கள்)
முகவரிக்கான ஆதாரமாக கீழ்க்கண்ட ஒன்றில் ஏதேனும் ஒன்று கொடுக்கப்படவேண்டும்.
1) வாக்காளர் அடையாள அட்டை
2) குடும்ப அட்டை
3) ஓட்டுனர் உரிமம்
4) பாஸ்போர்ட் அல்லது விசா
வயதுக்கான சான்றாக கீழ் கண்ட ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
1) பிறப்புச் சான்று
2) பள்ளிகல்லூரிச் சான்று
3) பாஸ்போர்ட்/விசா
மூன்று சாட்சிகள் கையெழுத்திட வேண்டும். சாட்சிகள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கணவன் -4, மனைவி 4 போட்டோக்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்-2009-ன் படி பதிவு செய்யத் தனியாக விண்ணப்ப படிவம் உள்ளது.http://www.tnreginet.net/english/forms.asp என்ற இணைப்பிலிருந்து 4 பக்க விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இச்சட்டத்தின் முக்கிய குறிப்பு:
******************************************
இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.
இச்சட்டத்தின்படி, பதிவுத் துறைத் தலைவர் அவர்கள் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய படிவத்தில் இல்லாத/ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யாத/உரிய கட்டணம் செலுத்தப்படாத கோரிக்கை மனுக்கள் குறைகளை சரி செய்து மீண்டும் அளிக்குமாறு மனுதாரருக்கு திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு திருமணப்பதிவு விதிகளின்படி மணமக்களின் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் சரித்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்படின், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப்பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.
இந்த மறுப்பு ஆணைமீது சம்பந்தப்பட்ட நபர்கள் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
அவ்வாறு செய்யப்பட்ட மேல்முறையீடு மீது மாவட்டப் பதிவாளரால் பிறப்பிக்கப்படும் ஆணை திருப்தி இல்லையெனில் இதன் மீது ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
பதிவுத்துறைத் தலைவரின் ஆணையே இறுதியானது.
தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வரும் நாளான 24.11.2009 முதல் நடைபெறும் அனைத்து திருமணங்களும், எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதி மீறல் இருப்பதாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும்.
இணைப்பு :
****************
திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும்.
உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது.
இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.
நன்றி: செல்வம் பழனிச்சாமி

Share
Posted in: Posted on: Tuesday, February 17, 2015

0 comments:

Copyright © 2013 Thiruvalandurai Village / Perambalur District .
.